மலைக்கோயில். மலை செங்குத்தாக இருப்பதாலும், சிவப்பு நிறத்தில் இருப்பதாலும் இத்தலம் 'திருச்செங்கோடு' என்று அழைக்கப்படுகிறது. இத்தலம் 'நாககிரி' என்றும் வழங்கப்படுகிறது. 1901 அடி உயரத்தில் உள்ள இம்மலைமீது ஏறிச் செல்வதற்கு சுமார் 1200 படிகளும் உள்ளன. பிருங்கி முனிவர் சிவனை மட்டும் வழிபட, அவருக்கு உணர்த்துவதற்கு சிவபெருமான் உமையொருபாகனாக காட்சியளித்தார் என்பது தல வரலாறு. சுவாமியும், அம்பாளும் இணைந்த மூர்த்தியாதலால் இத்தலத்து மூலவர் 'அர்த்தநாரீஸ்வரர்' என்ற பெயர் பெற்றார்.
மூலவர் 'அர்த்தநாரீஸ்வரர்' என்னும் திருநாமத்துடன், இறைவனும், இறைவியும் இணைந்த வடிவில் மேற்கு நோக்கி காட்சி அளிக்கின்றார். இவரது திருவடியில் ஒரு சுனை உள்ளது. அம்பாள் 'பாகம்பிரியாள்' என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள்.
பிரகாரத்தில் நாரி கணபதி, தட்சிணாமூர்த்தி, நாகேஸ்வரர், ஆதிகேசவப் பெருமாள், துர்க்கை, நவக்கிரகங்கள், பைரவர் முதலானோர் தரிசனம் தருகின்றனர்.
இத்தலத்தில் முருகப்பெருமான் சன்னதி சிறப்பு. அவர் செங்கோட்டு வேலனாக, கையில் வேலுடன் காட்சியளிக்கின்றார்.
இக்கோயிலுக்கு அடிவாரத்தில் இருந்து படி வழியாக வரும்போது நந்தி மண்டபத்திற்கு அருகில் 60 அடி நீளத்திற்கு மிகப்பெரிய 5 தலை நாகம் செதுக்கப்பட்டுள்ளது. இந்த நாகத்தின் அருகில் உள்ள 60 படிக்கட்டுக்களையும் 'சத்திய படிக்கட்டு' என்று அழைக்கப்படுகின்றது. பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றியவர்கள், வஞ்சக எண்ணம் கொண்டவர்கள், பொருளாசை கொண்டு மனம் மாறுபட்டவர்கள் இந்த சத்தியப் படியில் ஈரத்துணியுடன் வந்து முருகன் சன்னதியில் கற்பூரம் அணைத்து சத்தியம் செய்யச் சொல்வார்கள். இங்கு பொய் சத்தியம் செய்வதற்கு யாவரும் அஞ்சுவர்.
திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வந்தபோது, அவருடன் வந்த அடியார்களுக்கு குளிர் சுரம் உண்டாக, சம்பந்தப் பெருமான் 'அவ்வினைக் கிவ்வினை' என்னும் திருநீலகண்டப் பதிகம் பாடி சுரப்பிணியை நீக்கிய தலம்.
இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரத்தில் இக்கோயில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்மூலம் இக்கோயிலின் தொன்மையை அறிய முடிகிறது.
திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி ஆகிய மூன்றிலும் அருணகிரிநாதர் இத்தலத்து முருகனைப் பாடியுள்ளார்.
திருஞானசம்பந்தர் இரண்டு பதிகங்கள் பாடியுள்ளார். இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 2 மணி முதல் இரவு 6 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
|